கல்வெட்டியல்
பண்டைக் காலத்தில் நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் எனக் கருதப்பட்ட செய்திகள் கற்களில் வெட்டப்பட்டன. இவ்வாறு கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. பெரும்பாலும், மன்னர்களின் ஆணைகள், அவர்கள் செய்த பணிகள் போன்றவை கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டன. இவை தவிர வீரர்கள், பிரபுக்கள், அதிகாரிகள் போன்றோர் தொடர்பிலும், முக்கிய நிகழ்வுகள் தொடர்பிலும் கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டுக்கள், பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் இவை பொது இடங்களிலேயே அதிகம் காணப்படுகின்றன. கோயில்கள், குகைகள், பொது மண்டபங்கள், வெற்றித் தூண்கள், நடுகற்கள் எனப்படும் இறந்தோர் நினைவுக் கற்கள் என்பவற்றில் கல்வெட்டுக்களைக் காணலாம். கல்வெட்டுப் பொறிக்கும் வழக்கம் உலகின் பல பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வுகள் இறந்துபட்ட அல்லது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு மொழிகளிலுமான கல்வெட்டுக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன.
கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை ஆதலால், மிகப் பழங்கால வரலாற்றுச் செய்திகள், நிகழ்வுகளுக்கான நம்பகமான சான்றுகளாக இவை திகழ்கின்றன. பல கல்வெட்டுக்கள் ஒரு மொழியில் மட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலும் ஒரே செய்தியைக் குறிக்கும்படி அமைந்துள்ளன. இத்தகைய கல்வெட்டுக்கள் வழக்கொழிந்து மறக்கப்பட்டுவிட்ட மொழிகள் பலவற்றை வாசித்து அறியவும் அவற்றை மீட்டுருவாக்கம் செய்யவும் உதவுகின்றன. பண்டை எகிப்திய மொழி இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதே. பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதன் மூலம் எழுத்துக்களின் படிமுறை வளர்ச்சிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழ் நாட்டில் கல்வெட்டுக்கள்
தமிழ் நாட்டின் மிகப் பழைய கல்வெட்டுக்கள் நடுகற்களில் வெட்டப்பட்டவை ஆகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்திகளும் இதற்குச் சான்றாக அமைகின்றன. தொல்காப்பியத்தில், போர்க்களத்திலே வீரச்சாவு அடைந்தோருக்குக் கல்லெடுத்தலும், அக்கல்லில் அவர்தம் வீரச் செயல்களைப் பொறித்தலும் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறாக நடுகற்களில் தோன்றிய கல்வெட்டுக்கள் பல்லவர் காலத்தில் வேறு தேவைகளுக்கும் பயன்படத்தக்கதாக வளர்ச்சியடைந்தன. பல்லவர்களின் தொடக்ககாலக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியிலும், இடைக்காலத்தில் சமஸ்கிருதத்திலும் கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல், பிற்காலப் பல்லவர் காலத்தில் தமிழிலும் பொறிக்கப்பட்டன.
இவர்களுக்குப் பின்னர் சோழ மன்னரும், பாண்டியரும் கல்வெட்டுக்களைப் பொறிக்கும் வழக்கம் உடையோராக இருந்தனர். இதனால் கல்வெட்டுக்கள் பெரிதும் வளர்ச்சியுற்றன. இவ்வாறு பொறிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களின் மூலமே தமிழ் நாட்டின் இடைக்கால வரலாற்றின் பெரும்பகுதியை அறிந்து கொள்ள முடிந்தது.
கல்வெட்டியல் அல்லது சாசனவியல் (Epigraphy) என்பது, கல் அல்லது வேறு பொருட்களில் வெட்டப்பட்ட அல்லது உலோகங்களில் வார்க்கப்பட்ட எழுத்துக்கள் தொடர்பான ஆய்வுத்துறை ஆகும். இத்துறை பண்பாடு மற்றும் கால அடிப்படையில் கல்வெட்டுக்களை வகைப்படுத்துவதையும், அவற்றை வாசித்து விளக்குதல், அவற்றிலிருந்து முடிவுகளைப் பெற முயல்தல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள் கல்வெட்டியலாளர் எனப்படுகிறார்கள்.
கல்வெட்டியல், தொல்லியலில் பெருமளவு பயன்படுகிறது. ஐக்கிய அமெரிக்க நூலகச் சங்கம் (US Library of Congress), கல்வெட்டியலை, வரலாற்றுத் துறையின் துணைத் துறைகளில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது.
கல்வெட்டியலின் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும் எழுதும் முறை பற்றிய விடயம், தனியாக ஆராயப்படுகின்ற, கல்வெட்டில் எழுதப்பட்ட உரையின் இயல்பிலிருந்து வேறுபட்டதாகும். பொதுவாகக் கல்வெட்டுக்கள் பொது மக்களின் பார்வைக்காக வெட்டப்படுவனவாகும். எல்லாக் கல்வெட்டுக்களுமே இவ்வாறு இருக்கவேVடும் என்பதில்லை. சில பண்பாடுகளில் இவை கடவுளின் பார்வைக்கு எனக் கருதியும் வெட்டப்படுகின்றன. மைசீனியப் பண்பாட்டைச் சேர்ந்த லீனியர் பி ("Linear B") என்று அழைக்கப்படும் கல்வெட்டு, பொருளாதார மற்றும் நிர்வாகம் தொடர்பான பதிவுகள் என்று கண்டறியப் பட்டுள்ளது.
வரலாறு
கல்வெட்டியல் துறை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதியான வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வெட்டியலின் கொள்கைகள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டுள்ளன. ஐரோப்பியக் கல்வெட்டியல் தொடக்கத்தில், இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தியது. ஜார்ஜ் ஃபப்ரிசியஸ் (Georg Fabricius) - (1516–1571); ஆகஸ்ட் வில்ஹெல்ம் சம்ப்ட் (August Wilhelm Zumpt) - (1815–1877); தியோடோர் மாம்சென் (Theodor Mommsen) - (1817–1903); எமில் ஹியூப்னெர் (Emil Hübner) - (1834–1901); பிரான்ஸ் கியுமொண்ட் (Franz Cumont) - (1868–1947); லூயிஸ் ராபர்ட் (Louis Robert) - (1904–1985) போன்றவர்கள் இத்துறையில் தனிப்பட்ட பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.
மாம்சென்னினால் 1863 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டட, கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் லட்டினரம் என்னும் இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பான தொகுப்பு, போர்க்கால இடையீடுகளைத் தவிர்த்து, இன்றுவரை பெர்லினில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலான மிகப் பெரியதும், விரிவானதுமான தொகுப்பு இதுவேயாகும்.
கிரேக்கக் கல்வெட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் வேறொரு குழுவினால் எடுக்கப்பட்டன. 1825 தொடக்கம் 1877 வரையான காலப்பகுதியில், கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் கிரீசாரம் (Corpus Inscriptionum Graecarum) என்னும் தொகுப்பும் ஜெர்மனியிலிருந்தே வெளியிடப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட நவீன தொகுப்புக்களினால் இதைப் பலர் தற்போது பயன்படுத்துவதில்லை.
ரொசெட்டாக கல் (Rosetta Stone) என்பது, ஒரே பத்தியை படஎழுத்து (hieroglyphic) உட்பட்ட இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் வெளியிடப்பட்டது.
இக் கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 சதமமீட்டர் அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பெஹிஸ்ட்டன் கல்வெட்டு மூன்று வெவ்வேறுவிதமான ஆப்பெழுத்து (cuneiform) முறைகளில் பழைய பாரசீக மொழி, ஈலமைட்டு, பபிலோனிய மொழி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே உரையைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். படஎழுத்து முறைக்கு ரொசெட்டா கல்வெட்டு எப்படியோ, அப்படியே ஆப்பெழுத்துக்கு இக் கல்வெட்டு ஆகும். ஆப்பெழுத்துக்களை வாசித்து அறிவதில் இக்கல்வெட்டுப் பெரும் பங்காற்றியது. இது ஈரானில் உள்ள கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ளது.
பிரித்தானிய இராணுவ அலுவலரான சர் ஹென்றி ரோலின்சன் (Sir Henry Rawlinson) என்பவர், 1835, 1843 ஆகிய ஆண்டுகளில் இரண்டு பகுதிகளாக இக் கல்வெட்டை எழுத்துப்பெயர்ப்புச் செய்வித்தார். 1838 ஆம் ஆண்டில், பழைய பாரசீக மொழிப் பகுதியை ரோலின்சனால் மொழிபெயர்க்க முடிந்தது. எலமைட்டு மற்றும் பபிலோனிய மொழிப் பகுதிகள் 1843 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரோலின்சனாலும், மற்றவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டன. பபிலோனிய மொழி அக்காடிய மொழியின் பிற்கால வடிவம் ஆகும். இரண்டுமே செமிட்டிக் மொழிகள்.
செப்பேடு, 1989 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரமான மணிலாவிலுள்ள லகுனா டி பே ஏரிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி 900 ஏப்ரல் 21 ஆம் தேதிக்குச் சரியான, சக ஆண்டு 822 ஐச் சேந்ந்த ஒரு தேதியும் பொறிக்கப்பட்டுள்ள இச் செப்பேடு சமஸ்கிருதம், ஜாவா மொழி, மலே மொழி, பழைய தகாலாக் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இச் செப்பேடு இதை வைத்திருப்பவரான நம்வாரன் என்பவரை அவர் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்கும் ஒரு ஆவணம் ஆகும். இது, மணிலா குடா, இந்தோனீசியாவிலுள்ள மெடான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தொண்டோ, பிலா, புலிலான் ஆகிய இடங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. இது அக்காலத்தில் தகாலாக் மொழி பேசிய மக்களுக்கும், ஜாவாவின் ஸ்ரீ விஜயப் பேரரசுக்கும் இடையில் வலுவான தொடர்புகள் இருந்ததைக் காட்டுகிறது. இச் செப்பேடு இப்பொழுது பிலிப்பைன்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது

லகுனா செப்பேடு (கிபி 900), 16 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட எசுப்பானியக் குடியேற்றத்துக்கு முன் பிலிப்பைன்ஸில் பெருமளவு இந்தியப் பண்பாட்டுத் தாக்கம் இருந்ததைக் காட்டுகிறது.
தமிழ்ச் செப்பேடுகள், பல்வேறு தென்னிந்திய அரச மரபினரால், தனிப்பட்டவர்களுக்கும், பொது நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட, ஊர்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் வேறு கொடைகள் குறித்த பதிவுகள் ஆகும். [1] தமிழ் நாட்டின் வரலாற்றை மீளுருவாக்கம் செய்வதில் இச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகள் முக்கியமானவை ஆகும்.[2] தமிழ்ச் செப்பேடுகள் தொடர்பான கொடைகள் கி.பி 10 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், சாளுக்கியர், சோழர், விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்தவை. மத்தியகாலத் தென்னிந்தியாவின் சமூக நிலை பற்றி அறிவதற்கு உதவுவதால் இவை கல்வெட்டியல் தொடர்பில் மிகப் பெறுமதியானவை. அத்துடன், தென்னிந்திய அரச மரபினர் தொடர்பான வரலாற்றில் காணப்படும் இடைவெளிகளை நிரப்புவதிலும் இவை பெரிதும் துணை புரிகின்றன.
[தொகு] தென்னிந்தியக் கல்வெட்டுக்கள்
பெரும்பாலான தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்கள் தமிழிலேயே வெட்டப்பட்டுள்ளன. ஆனால் 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கல்லில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியிலும் உள்ளன. சில இரு மொழியிலும் உள்ளன. கடந்த 120 ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஈ. ஹல்ட்ஸ்ச் (E. Hultzsch), மதராஸ் அரசின் கல்வெட்டியலாளராக பணியேற்றதன்பின், 1886 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென்னிந்தியக் கல்வெட்டுக்களை முறையாகச் சேகரிக்கத் தொடங்கினார்.
மிகப் பழைய செப்பேடு கி.பி 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. லேடன் செப்பேடுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு, சுந்தர சோழனின் அன்பில் செப்பேடு, வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிச் செப்பேடு, என்பவை கண்டுபிடித்து வெளியிடப்பட்டவற்றுள் அடங்குவனவாகும்.
http://ta.wikipedia.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக